ஷா ஆலாம், நவம்பர்-25, இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்ட 30,000 ரிங்கிட் மானியத்திற்கு ஏராளமான கழகங்கள் விண்ணப்பித்து வருவதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.
எனினும், பல கூட்டுறவுக் கழகங்கள் விண்ணப்பம் செய்வதில் பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ளதாக அவரின் முதன்மை அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் குறிப்பிட்டார் .
பெரும்பாலான விண்ணப்பங்கள் முறையான ஆவணங்களோடு வருவதில்லை என்றார் அவர்.
இது போன்ற பிரச்னைகளைச் சந்திக்கும் கூட்டுறவுக் கழகங்கள், அருகிலுள்ள கூட்டுறவு ஆணையங்களின் உதவியை நாடலாம் என அன்புமணி ஆலோசனைக் கூறினார்.
முழுமையான விண்ணப்பங்களே பரிசீலனை செய்யப்படும் என்றார் அவர்.
நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக நடைபெற்ற இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற அனைத்துக் கூட்டுறவுக் கழகங்களும், அந்த 30,000 ரிங்கிட் நிதியைப் பெறலாம் என ஏற்கனவே ரமணன் அறிவித்திருந்தார்.
கூட்டுறவுக் கழகங்கள் தத்தம் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்த அவற்றுக்கு உதவும் நோக்கில், அந்த மானியம் வழங்கப்படுகிறது.
இவ்வேளையில், நாட்டில் பதிவுப் பெற்ற 400-க்கும் மேற்பட்ட இந்தியக் கூட்டுறவுக் கழகங்களில் சுமார் 200 கழகங்கள் தான் துடிப்புடன் இயங்கி வருகின்றன.
இந்த சிறு எண்ணிக்கையில் இருக்கும் இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்குள் ஒற்றுமை முக்கியம் என்பதையும் டத்தோ ஸ்ரீ ரமணன் வலியுறுத்தியதாக அன்புமணி குறிப்பிட்டார்.
ஒன்றுபட்டு அரசாங்க அனுகூலங்களை அவை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென, மிட்லண்ட்ஸ் கூட்டுறவுக் கழகத்தின் 73-வது ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது ரமணனை பிரதிநிதித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அன்புமணி கூறினார்.
மிட்லண்ட்ஸ் கூட்டுறவுக் கழகத்தின் தலைவர் AN வேலு தலைமையில் அதன் உறுப்பினர்கள் திரளாக அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.