கோத்தா திங்கி, நவம்பர்-10, கம்போடியாவில் 4,000 ரிங்கிட் மாதச் சம்பளத்தில் வேலை என நம்பிப் போன இரு நண்பர்கள், வேலை வாய்ப்பு மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
கம்போடியாவில் கேசினோ சூதாட்ட மையத்தில் வேலைக் கிடைத்திருப்பதாக, ஜோகூர், கோத்தா திங்கி, Felda Air Tawar 4 குடியிருப்பாளர்களான இருவரும் நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அங்குச் சென்ற பிறகோ, சம்பளமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் 18 மணி நேரங்களுக்கு scammers எனப்படும் மோசடிக்காரர்களாக வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் மலேசியாவுக்கே திருப்பியனுப்பி விடுமாறு கேட்ட போது, 30,000 ரிங்கிட் பணத்தை எடுத்து வைத்து விட்டு பேசுங்கள் என அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.
செப்டம்பரில் கம்போடிய போலீஸ் அம்மோசடி கும்பலின் மறைவிடத்தை முற்றுகையிட்ட போது கைதான 8 மலேசியர்களில் அவ்விருவரும் அடங்குவர்.
பிரதமர் துறை அமைச்சரும், ஜோகூர் பெங்கராங் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சாயிட்டின் உதவியுடன் அவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
இருவரில் ஒருவரது பெற்றோர், அமைச்சருக்கு நன்றிக் கூறியதோடு அனைவருக்கும் இதுவொரு நல்ல பாடமாக இருக்க வேண்டுமென்றார்.
பிள்ளைகள் எதையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்; குறிப்பாக பெற்றோரின் பேச்சை கேளுங்கள் என்றார் அவர்.