
ஸ்ரீ ஹரிகோட்டா, நவம்பர்-3,
இதுவரை தான் அனுப்பியதிலேயே மிகப் பெரிய எடையாக 4,410 கிலோ கிராம் கொண்ட துணைக்கோளத்தை, இந்தியா வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சியுள்ளது.
‘பாகுபலி’ ராக்கெட் என அழைக்கப்படும் LVM3 மூலம், CMS-03 அந்த துணைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நேற்று அதிகாலை விண்ணில் ஏவப்பட்டது.
இது, இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்காக வடிவமைக்கப்பட்ட மிக முக்கியமான தொலைத்தொடர்பு துணைக்கோளாகும்.
இராணுவம், கடற்படை, மற்றும் வான்படைக்கு இடையே விரைவான மற்றும் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலை இது கொண்டுள்ளது.
Ka-band communication தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், எல்லை கண்காணிப்பு, உளவு நடவடிக்கைகள், மற்றும் கடற்படை தொடர்புகள் அனைத்திலும் உயர் தர வேகம் மற்றும் பாதுகாப்பையும் இது வழங்கும்.
இது பூமியிலிருந்து சுமார் 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதை அமைத்து, இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் என ISRO தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
அதிக எடை கொண்ட துணைக்கோளை திட்டமிட்டபடி அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி, இந்தியா மீண்டும் ஒரு பெருமையை அடைந்துள்ளதாக அவர் பெருமையுடன் கூறினார்.



