Latestஉலகம்

46 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி, கமல் ஒரே திரையில்; இரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய அறிவிப்பு வீடியோ

சென்னை, பிப்ரவரி-22-தமிழ் சினிமா இரசிகர்கள் காத்திருந்த வரலாற்று தருணமாக
46 ஆண்டுகளுக்குப் பிறகு, இரு உச்ச நட்சத்திரங்களான
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும்
மீண்டும் ஒரே படத்தில் இணைகிறார்கள்.

அவர்கள் இணையும் படத்தை ‘ஜெய்லர்’ வெற்றிப் பட இயக்குநர் நெல்சன் இயக்குகிறார்.

அதன் அறிமுக வீடியோவை தனக்கே உரிய dark humour நகைச்சுவை பாணியில் நெல்சன் நேற்று வெளியிட, சமூக வலைத் தளங்களில் ரஜினி-கமல் தீவிர இரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா இரசிகர்களே கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி-கமலோடு நெல்சனும் அவரின் ஆஸ்தான இசையமைப்பாளருமான அனிருத்தும் இந்த promo வீடியோவில் தோன்றுகின்றனர்.

2 பெரிய நடிகர்கள் இணைந்து நடித்தால் வழக்கமாக ஏற்படும் ego பிரச்னைகளை, இந்த அறிமுக வீடியோவில் நக்கலாக நெல்சன் காட்சிப்படுத்தியுள்ளார்.

இருவரும் 70, 80-ஆம் ஆண்டுகளில் பிரபலமான ஆடை ஸ்டைல்களில் நடந்து வருவதும், காருக்குள் அமர்ந்து பேசுவதும் பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது.

அதிலும் கமல் “யார் ஹீரோ?” என நெல்சனைப் பார்த்து கேட்பதும், ரஜினியும் அதையே திரும்பச் சொல்வதும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

இருவரில் யார் ஹீரோ யார் வில்லனாக இருப்பர் என, சமூக ஊடகங்களில் பட்டிமன்றமே நடந்துவருகிறது.

கமலுடன் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினி, அதன் பிறகு ‘மூன்று முடிச்சு’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘ஆடு புலி ஆட்டம்’, ’16 வயதினிலே’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற படங்களிலும் சேர்ந்து நடித்தார்.

பின்னர் ஒரு கட்டத்தில் இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்; அதன் பிறகே ஒருவர் சூப்பர் ஸ்டாராகவும் இன்னொருவர் உலகநாயகனாகவும் யாரும் தொட முடியாத உச்சத்தை அடைந்தனர்.

இன்று 70 வயதுக்கு மேல் இருவரும் மீண்டும் ஒன்றிணைந்திருப்பது சினிமா இரசிகர்களை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!