
ரோம், ஜூலை-1 – தெற்கு ஐரோப்பா மற்றும் பிரிட்டனை வெப்ப அலை தாக்கியுள்ளது.
இதனால் சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளது.
கடுமையான வெப்ப அலையால் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் பாரீஸ் மாநகரை சிவப்பு எச்சரிக்கையில் வைத்துள்ளனர்.
அதே சமயம் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகள் வரலாறு காணாத வெப்ப நிலையைப் பதிவுச் செய்துள்ளன.
இந்தக் கோடை காலத்தின் முதல் பெரிய வெப்ப அலை, Mediterranean எனப்படும் மத்தியதரைக் கடலின் வடக்கு கடற்கரையில் உள்ள நாடுகளை வாட்டி வருகிறது.
தவிர, அக்கடற்கரை ஜூன் மாதத்தில் வரலாறு காணாத வெப்பநிலையை எட்டியதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
பிரான்சின் தேசிய வானிலை நிறுவனம், பாரீஸ் மற்றும் பிற 15 நகரங்களுக்கு செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதாவது வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் தீவிரமடைந்த வெப்ப அலைகள் அடிக்கடி நிகழும் என நிபுணர்கள் எச்சரித்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு அருகில் ஆம்புலன்ஸ்கள் தயாராக இருக்கின்றன.
காட்டுத் தீ மோசமடையாமல் இருக்க ஏதுவாக, அதனை அணைக்கும் பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.