Latestமலேசியா

48 மணி நேரம் இடைவிடாது ‘கேக்’ செய்து கின்னஸ் உலக சாதனைப் படைத்த பூச்சோங்கை சேர்ந்த உதயகலா ரத்னவேலு

பூச்சோங், நவம்பர்-7 – பெரிதாக கனவு காண்பவர்களுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

ஆனால், கனவு கண்டால் மட்டும் போதாது, போதிய உழைப்பும் போட வேண்டும்.

அப்படி அந்த நம்பிக்கை மற்றும் உழைப்பின் சான்றாக திகழ்கிறார் சிலாங்கூர் பூச்சோங்கைச் சேர்ந்த உதயகலா ரத்னவேலு.

நவம்பர் 5 முதல் 7 வரை, பூச்சோங்கில் உள்ள தன் வீட்டிலேயே, Cake Paradise Empire நிறுவனத்தின் நிறுவனரான உதயகலா, 48 மணி நேரம் இடைவிடாது கேக் சமைத்து கின்னஸ் உலக சாதனை முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இம்முயற்சியில் 400-க்கும் மேற்பட்ட கேக்குகள் தயாரிக்கப்பட்டன; ஒவ்வொன்றும் அவரது உழைப்பையும், அன்பையும் பிரதிபலித்தன.

அவர் தொடங்கிய சாதாரண முயற்சி இன்று மலேசியாவின் பிரபலமான பேக்கிங் வர்த்த முத்திரையாக வளர்ந்துள்ளது.

இந்த கின்னஸ் சாதனைக் தமக்கு சாதாரணமாகக் கிடைத்து விடவில்லை என, வணக்கம் மலேசியாவுக்கு வழங்கிய பேட்டியில் உதயகலா கூறினார்.

ஏராளமான சவால்களை எதிர்கொண்டாலும், அதில் நிறைய அனுபவங்களையும் அவர் கற்றுக் கொண்டுள்ளார்.

முறைப்படி பயிற்சி எதுவும் செல்லாமல் கேக் தயாரிப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொண்டவருக்கு, குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகளின் ஆதரவும் முதுகெலும்பாக இருந்துள்ளது.

இவ்வேளையில், அம்முயற்சியில் மகளுக்கு வேண்டியவற்றை செய்துகொடுத்து ஊக்கப்படுத்திய பெற்றோர், இன்று அவரின் சாதனையால் பூரித்துப் போயுள்ளனர்.

இந்த சாதனை முயற்சி வெறும் எண்ணிக்கைகளுக்காக அல்ல; இது பெண்களின் முன்னேற்றம், தொழில் முயற்சி, மற்றும் மலேசியாவின் உறுதியான மனப்பாங்கு ஆகியவற்றை கொண்டாடும் நிகழ்வாகும்.

திடமான உழைப்பும், தொழில் பக்தியும் சேர்ந்தால், கேக்குகள் மட்டுமல்ல வரலாறும் உருவாகும் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளார் உதயகலா…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!