
கோலாலாம்பூர், ஏப்ரல்-10-கோலாலாம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் இந்தியக் கலாச்சார மையமும் இணைந்து, ICCR எனப்படும் இந்தியக் கலாச்சார உறவுகள் மன்றத்தின் 77-வது தினத்தை அண்மையில் கொண்டாடின.
கலாச்சார மையத்தின் 15-ஆம் ஆண்டு நிறைவையும் கொண்டாடிய இரட்டை விழாவாக இது அமைந்தது.
இந்திய உயர் ஆணையர் B. N. ரெட்டி, தேசிய ஒருமைப்பாட்டுத் துணையமைச்சர் R. யுனேஸ்வரன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினர்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சான MOSTI-யின் தலைமைச் செயலார் டத்தோ Dr நகுலேந்திரன் கங்கயட்கரசு, தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பி. சகாதேவன் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், யோகா, பரதநாட்டியம் ‘OmKarakarini’, மற்றும் கதக்களி நடனங்கள் இடம்பெற்றன.
நெகிரி செம்பிலான் சமஸ்தானாதிபதியின் புதல்வர் Tunku Zain Al-‘Abidin ibni Tuanku Muhriz அவர்களும் சிறப்பு வருகைபுரிந்து, தனது இந்திய பயண அனுபவங்களை பகிர்ந்தார்;
பத்ம ஸ்ரீ டத்தோ ரம்லி இப்ராஹிம், இந்தியாவில் நடைபெற்ற ICCR நடன மற்றும் இசை விழாவில் பங்கேற்ற அனுபவத்தை விவரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணையமைச்சர் யுனேஸ்வரன், இந்நிகழ்வு மலேசிய-இந்திய கலைக் கலாச்சார பிணைப்புகளை பிரதிபலிக்கும் வகையிலிருந்ததாக சொன்னார்.
இந்தியாவுக்கு வெளியே இந்திய வம்சாவளியினரை அதிகமாக் கொண்ட நாடுகளில் ஒன்றாக மலேசிய விளங்கும் நிலையில், இந்தக் கொண்டாட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக B.N.ரெட்டி கூறினார்.
சமூகத் தலைவர்கள், பிரமுகர்கள், கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த விழா, இந்திய–மலேசிய கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.



