Latestமலேசியா

8 இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கு RM1.4 மில்லியன் நிதியுதவி; ரமணன் ஒப்படைப்பு

கோலாலம்பூர், பிப்ரவரி-16 – நாட்டிலுள்ள இந்தியக் கூட்டுறவுக் கழகங்களை வலுப்படுத்தும் முயற்சியாக, 8 கூட்டுறவுக் கழகங்களுக்கு 1.4 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவற்றை எடுத்து வழங்கினார்.

6 கூட்டுறவுக் கழகங்கள் Bantuan Bakti Madani திட்டத்தின் கீழ் 175,600 ரிங்கிட் மானியத்தைப் பெற்றன.

மேலுமிரு கூட்டுறவுக் கழகங்கள் மலேசியக் கூட்டுறவு ஆணையம் SKM-மின் கீழ் சுழல் நிதியிலிருந்து 1.225 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பெற்றன.

இந்தியச் சமூகத்தின் பொருளாதார நிலையை உயர்த்த தமதமைச்சு மெற்கொண்ட முயற்சி அதுவென ரமணன் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு அக்டோபரில் முதன் முறையாக நடைபெற்ற இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாட்டைத் தொடர்ந்து இந்நிதி வழங்கப்படுகிறது.

அதில் பங்கேற்ற 200 இந்தியக் கூட்டுறவுக் கழகங்களில் 17 மட்டுமே நிதிக்கு விண்ணப்பித்திருந்தன; அவற்றில் 6 கழங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டது.

எஞ்சியவை இன்னமும் SKM பரிசீலனையில் இருப்பதாக துணை அமைச்சர் கூறினார்.

இவ்வாண்டு 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் பந்துவான் பக்தி மடானி திட்டத்தின் கீழ் இந்நிதி வழங்கப்படுகிறது.

அதிகபட்சம் ஒரு கூட்டுறவுக் கழகம் 30,000 ரிங்கிட் வரையில் பெற முடியும்.

எனவே இன்னமும் விண்ணப்பிக்காத அல்லது விண்ணப்பத்தில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கு உரிய வழிகாட்டிகளும் விளக்கங்களும் வழங்கப்படுமென டத்தோ ஸ்ரீ ரமணன் கூறினார்.

இவ்வேளையில், இந்தியர்களின் வியாபார பெருக்கத்திற்கு உதவும் முயற்சியில், விரைவிலேயே ஒரு பெரிய முன்னெடுப்பு அறிவிக்கப்படும் என்றார் அவர்.

ஆனால் மேற்கொண்டு விவரங்களை துணை அமைச்சர் தெரிவிக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!