
புத்ராஜெயா, ஏப்ரல்-3-உலகளாவிய எரிசக்தி சவால்களைச் சமாளிக்கும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு புதிய ‘Work From Home’ திட்டத்தை புத்ராஜெயா அறிவித்துள்ளது.
அவ்வகையில் அலுவலகத்திலிருந்து 8 கிலோ மீட்டருக்கு மேல் வசிக்கும் அரசு ஊழியர்கள், இனி வாரத்திற்கு 3 நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இத்திட்டம் ஏப்ரல் 15 முதல் அமுலுக்கு வருவதாக, பொதுச் சேவைத் துறை அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையை வேலை நாளாகக் கொண்ட கெடா, கிளந்தான், திரங்கானுவில் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை வீட்டிலிருந்து வேலை செய்யலாம்.
இதுவே மற்ற மாநிலங்களில் செவ்வாய் முதல் வியாழன் வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்படும்.
இது, கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் மாநில தலைப்பட்டணங்களில் உள்ள ஊழியர்களுக்கு பொருந்தும்.
அதே சமயம், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய துறைகளில் பணிபுரிபவர்கள் இத்திட்டத்திலிருந்து விலக்கு பெறுவார்கள்.
குறிப்பாக, கல்விச் சேவையில், பள்ளி நேரத்தில் சம்பந்தப்படாத அரசு ஊழியர்கள் மட்டுமே வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும்.
இந்நிலையில், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள், இணையக் கண்காணிப்பு முறையின் மூலம் மணிக்கொரு முறை வருகையை பதிவுச் செய்ய வேண்டும்.
வீட்டிலிருந்து வேலை செய்தாலும், அரசாங்கச் சேவையளிப்பு பாதிக்கப்படாதிருக்க, ஊழியர்களின் வேலைத் திறனை அந்தந்த துறை தலைவர்கள் கண்காணிப்பார்கள்.
அமைச்சரவையின் உத்தரவுக்கேற்ப, பயணச் செலவுகளை குறைப்பதுடன், எரிசக்தி பயன்பாட்டையும் கட்டுப்படுத்துவது இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.



