
ஷா அலாம் – ஆக 5 – இன்று அதிகாலை ஷா அலாம் பகுதியில் போலீஸ் ரோந்துக் கார்களைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் அதிவேகமாக துரத்திச் சென்று இரு சகோதரர்களை கைது செய்தனர். புரோட்டான் வீரா காரில் பயணித்த அந்த இருவரும் , சிலாங்கூர் போலீஸ் தலைமையகம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவர்களை ஆறு போலீஸ் வாகனங்கள் கி.மீ. வேகத்தில் பின்தொடர்ந்து சென்றது. அந்த சகோதரர்களின்
காரிலிருந்து Ketum Juice எனப்படும் பச்சை நிறத்திலான போதைப் பொருள் ஜூஸ் பறிமுதல் செய்யப்பட்டதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இக்பால் இப்ரஹிம் ( Mohd Iqbal Ibrahim ) கூறினார்.
அதிகாலை 1.30 மணியளவில், ஷா அலாம் , செக்சன் 7இல் உள்ள வர்த்தக மையத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான நீல நிற புரோட்டான் வீராவை போலீசார் கண்டனர். அந்த கார் நிறுத்தும்படி எச்சரிக்கை சைரன் மற்றும் ஒலிபெருக்கி வாயிலாக கோரிக்கை விடுத்தும் அக்கார் அதனை புறக்கணித்து மிகவும் வேகமாக சென்றது. இதனைத் தொடர்ந்து அக்காரை போலீஸ் ரோந்துக் கார்கள் துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டன . சுமார் ஒரு மணி நேரம் கிட்டத்தட்ட 90 கிலோமீட்டருக்கு துரத்திச் சென்ற பின்னர் சிலாங்கூர் போலீஸ் நுழைவாயிலுக்கு அருகே அக்காரை நிறுத்தும் முயற்சியில் போலீசார் வெற்றி பெற்றனர். அங்கு 18 மற்றும் 24 வயதுடைய இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதோடு காரின் முன்புற பயணிகள் இருக்கையின் கீழ் போதைப் பொருள் ஜூஸ் இருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக முகமட் இக்பால் கூறினார்.
போலீசாரின் கடமையை செய்வதற்கு தடையாக இருந்தது மற்றும் Ketum போதைப் பொருள் வைத்திருந்ததன் தொடர்பிலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.