கோலாலம்பூர், டிச 16 – 2019 ஆண்டு தொடங்கி இவ்வாண்டு நவம்பர் மாதம்வரை இந்திய தொழில்முனைவர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 9,412 தொழில் முனைவர்களுக்காக தெக்குன் நேசனல் மூலம் 204. 5 மில்லியன் ரிங்கிட்டை தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு அங்கீகரித்துள்ளது.
இவற்றில் 1,877 தொழில் முனைவர்கள் அல்லது 20 விழுக்காட்டினர் தெக்குன் நேசனலுக்கு கடனை திரும்ப செலுத்த தவறியவர்களின் புகார்களை பெறும் நிறுவனத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடனை திரும்ப வசூலிப்பதற்காக தெக்குன் நேசனல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றில் ஏ.கே.பி.கே (AKPK) எனப்படும் கடன் நிர்வாக நிறுவனத்தின் ஆலோசனைகளில் பங்கேற்பது மற்றும் சம்பந்தப்பட் தொழில் முனைவர்களை கண்காணிக்கும் நடவடிக்கையும் அடங்கும் என ரமணன் கூறினார்.
மேலும் எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் கடனை திரும்ப செலுத்தும் ஆலோசனையை விரைந்து நினைவுறுத்துவது மற்றும் கடனை திரும்ப செலுத்தும் அட்டவணையை மறுபரிசீலிப்பதும் அடங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதுதவிர கடனை திரும்ப செலுத்தும் திட்டத்தை மறுபரிசீலிப்பது மற்றும் தாராளமான அணுகுமுறையின் மூலம் கடனை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதுடன் , திரும்ப செலுத்தும் கடன் தொகையை குறைப்பதும் அடங்கும்.
கடன் தொகையை திரும்ப செலுத்தாததற்காக கருப்பு பட்டியலுக்கு உள்ளானவர்களின் விழுக்காடு குறித்து செனட்டர் டத்தோ சிவராஜ் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்தபோது ரமணன் இத்தகவலை வெளியிட்டார்.