பட்டவொர்த், செப்டம்பர்-4 – அசல் தங்கக் கட்டி எனக் கூறி, ஓர் ஆடவரிடம் 32,000 ஆயிரம் ரிங்கிட்டை மோசடி செய்த குற்றச்சாட்டை, இரு ஆடவர்கள் மறுத்து விசாரணைக் கோரியுள்ளனர்.
பினாங்கு, ஜியோர்ஜ்டவுன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையே , 33, 42 வயதுடைய இருவர் மீதும் 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இரு ‘தங்கக்’ கட்டிகளைக் காட்டி சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இறக்குமதியான சொக்கத் தங்கமென, 64 வயது முதியவரை இருவரும் நம்ப வைத்துள்ளனர்.
மீ கோரேங் விற்பனையாளர் மற்றும் சாவி செய்பவரான இரு சந்தேக நபர்களும், ஜூன் 13, 14 ஆகிய இரு தேதிகளில் செபராங் பிறையில் உள்ள அடகுக் கடையில் வைத்து அக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
இருவரும் தலா 14,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
வழக்கு அக்டோபர் 9-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.
குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஓராண்டு முதல் பத்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், பிரம்படியும், அபராதமும் விதிக்கப்படலாம்.