மூவார், செப்டம்பர் 10 – மாணவர்களை உட்படுத்தி சர்ச்சைக்குரிய காணொளிகளை டிக் டோக்கில் பதிவேற்றி வைரலான, 24 வயது பள்ளி பேருந்து ஓட்டுநர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
முதல் குற்றச்சாட்டின்படி, அவனின் உறவினரின் நான்கு வயது மகளைக் கன்னத்தில் முத்தமிட்டது, பாலியல் ரீதியாக வகைப்படுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டது.
அதேவேளையில், இரண்டாவது குற்றச்சாட்டில், ஒன்பது வயது சிறுமியைப் பலமுறை பார்த்தது பாலியல் நோக்கமாக கருதியும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், குற்றம் சாட்டப்பட்ட அந்த பேருந்து ஓட்டுநர், தன் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து, கண்ணீர் மல்கி தலை குனிந்து நின்றுள்ளார்.
இதனிடையே, குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து, இன்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
30,000 ரிங்கிட் ஜாமின் மற்றும் மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் தன்னை குறித்த விவரங்களைத் தெரிவிக்கவும், பாதிக்கப்பட்ட மாணவிகளையும் சாட்சியங்களையும் தொந்தரவு செய்யவோ தொடர்பு கொள்ளவோ கூடாது என்ற கூடுதல் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அக்டோபர் 10-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.