ஜெனிவா, செப்டம்பர் -18, உலகில் ஒவ்வொரு 4 நிமிடங்களிலிருந்து 6 நிமிடங்கள் வரை சராசரியாக ஒருவர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றார்; மேலும் மூவர் நீண்டகால அல்லது நிரந்தர இயலாமைக்கு ஆளாகின்றனர்.
அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் மேற்பட்டோர் 20 வயதுக்கும் கீழ்பட்டவர்கள் ஆவர்.
அதிலும் பெரும்பாலோர் விவசாய நிலங்களில் வேலை செய்பவர்களும் சிறார்களும் ஆவர் என உலக சுகாதார நிறுவனம் WHO தெரிவித்தது.
ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்க லத்தின் வட்டாரங்களைச் சேர்ந்த மூன்றாம் உலக நாடுகளிலேயே இந்த பாம்புக்கடி மரணங்கள் அதிகம் பதிவாகின்றன.
பாம்புக்கடிக்குத் தேவையான விஷமுறிவு மருந்துகளின் கையிருப்பு அந்நாட்டரசாங்கங்களிடம் போதுமான அளவில் இல்லை.
இதனால் பாம்புக் கடி சம்பவங்கள் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் அங்கு அதிக மரணங்கள் நிகழுகின்றன.
பாம்புக் கடியில் அப்படியே உயிர் பிழைத்தாலும், பலர் நீண்ட கால அல்லது நிரந்தர இயலாமைக்கு ஆளாகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 19-ஆம் தேதி அனுசரிக்கப்படும் அனைத்துலக பாம்புக்கடி விழிப்புணர்வு தினத்தை ஒட்டி WHO அவ்விவரங்களைப் பகிர்ந்துகொண்டது.