புத்ராஜெயா, செப்டம்பர்-19, அரசுத் துறைகளில் JAKIM எனப்படும் இஸ்லாமிய மேம்பாட்டு துறை அதிகாரிகளின் பங்கு, இஸ்லாமிய நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமே.
அதற்கு மேற்பட்டு கொள்கை முடிவுகளில் அவர்கள் சம்பந்தப்பட மாட்டார்கள்.
மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, மற்றும் தாவோ மதங்களின் ஆலோசக மன்றத்துடனான (MCCBCHST) நேற்றைய சிறப்புச் சந்திப்பின் போது அது தெளிவுப்படுத்தப்பட்டது.
அவ்விவகாரத்தில் அம்மன்றத்தின் ஐயத்தைப் போக்கும் வகையில், தேசிய ஒற்றுமை அமைச்சர் Aaron Ago Dagang மற்றும் சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Naím Mokhtar இருவரும் நேரில் பங்கேற்று அவ்விளக்கத்தை அளித்தனர்.
தவறான புரிதலைப் போக்க சம்பந்தப்பட்ட தரப்புகளைச் சந்திக்குமாறு அவ்விரு அமைச்சர்களுக்கும் பிரதமர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
அரசுத் துறைகளில் JAKIM அதிகாரிகளை நியமிப்பது 2006-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
அந்தந்த அமைச்சுகளோ அரசுத் துறைகளோ நிறுவனங்களோ விண்ணப்பம் செய்தால் மட்டுமே அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.
நடப்பில் அத்தகைய 1,250 அதிகாரிகள் உள்ளனர்; புதிதாக யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இஸ்லாம் அல்லாத சர்வ சமய மன்றம் அமைச்சர்களின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
அரசுத் துறைகளில் Jakim அதிகாரிகளை நியமிப்பது அரசியலமைப்புச் சட்டத்தை மீறலாம் என, MCCBCHST முன்னதாக ஐயம் தெரிவித்தது.
அனைத்து மலேசியர்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை அது பாதிக்கலாம் என அம்மன்றம் விளக்கியது.