புது டெல்லி, செப்டம்பர் -28, ஒரு வாரமாக இந்திய அரசியல் அரங்கிலும் பொது மக்கள் மத்தியிலும் பிரளையத்தை ஏற்படுத்திய திருப்பதி லட்டு விவகாரம், தற்போது உச்ச நீதிமன்றத்தை அடைந்துள்ளது.
திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்புகள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தை விசாரிக்குமாறு, பாரதீய ஜனதாவின் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி சுப்ரமணிய சுவாமி செய்த மனு, வரும் திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரும் அம்மனுவில் தன்னை இணைத்துகொண்டுள்ளார்.
அவ்விஷயத்தில் நீதிமன்றத்தின் நேரடி கண்காப்பிலான முழு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என இருவரும் கோரியுள்ளனர்.
அதே சமயம், திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய் குறித்த முழு அறிக்கையோடு, விரிவான தடயவியல் அறிக்கையையும் ஆந்திர மாநில அரசாங்கம் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியின் போது திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை கலப்படம் செய்யப்பட்டதாக ஆய்வுக் கூட அறிக்கை முன்னதாக உறுதிச் செய்திருந்தது.
இது குறித்து விரிவான அறிக்கை வேண்டுமென இந்திய அரசாங்கமும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.