அங்காரா, அக்டோபர்-1, துருக்கியில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய நகரத்தின் இடிபாடுகளிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகப் பழைமையான eyeliner எனப்படும் கண் மையை கண்டுபிடித்துள்ளனர்.
இது 8,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் ஒப்பனையைப் பயன்படுத்தியதை நிரூபித்துள்ளது.
மக்கள் மத்தியில் இன்று வரை பிரபலமாக உள்ள அந்த kohl stick வகை கண் மை, மேற்கு துருக்கியில் உள்ள பண்டைய குடியேற்றமான யெசிலோவா ஹோயுக்கில் (Yeşilova Höyük) கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த Kohl குச்சி, பச்சை நிற சர்பைன்டன் (serpentine) ரத்தினக் கல்லைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 10 செண்டி மீட்டர் நீளமும் ஒரு சென்டிமீட்டர் தடிமனும் கொண்ட அந்த கண் மை குச்சி, பண்டைய காலங்களில் யெசிலோவா ஹோயுக் மக்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு கலைப்பொருட்களில் ஒன்றாகும்.
8,200 ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் நுனியில் கருப்பு வண்ணப்பூச்சின் தடயங்கள் உள்ளது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த kohl கண் மையானது, பல நூற்றாண்டுகளாக சமூகப் பொருளாதார அந்தஸ்து பாகுபாடின்றி அனைத்து பாலினங்களாலும் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளதாக, முன்னணி தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜாஃபர் டெரின் (Zafer Derin) கூறினார்.
எகிப்து, லெவன்ட் (the Levent), சிரியா, ஈரான் மற்றும் அனடோலியா (Anatolia) போன்ற உலகின் பல்வேறு பகுதிகளிலும் kohl கண் மை பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.