கிள்ளான், அக்டோபர்-3, மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்துக்கு இனி ஒவ்வோர் ஆண்டும் 1 லட்சம் ரிங்கிட் நிதியை வழங்குவதாக, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அறிவித்துள்ளார்.
கிள்ளானில் நடைபெற்ற அக்கழகத்தின் தேசிய மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய போது, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அவ்வாறு சொன்னார்.
மாநாட்டு உரையின் போது அக்கழகத்தின் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன் 6 கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு 5 லட்சம் ரிங்கிட் நிதியுதவி, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு Smart board, மாநில மற்றும் தேசிய அளவிலான ஆசிரியர் தின கொண்டாட்டம், ம.இ.கா தலைவர்கள் ஆண்டு தோறும் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பிரச்னைகளைத் தெரிந்துகொள்வது, ஓய்வுப் பெற்ற மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்குதல், ஆண்டுக்கு ஒருமுறை அல்லது ஈராண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது ஆகியவையே அக்கோரிக்கைகளாகும்.
அவற்றில், ம.இ.கா தலைவர்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை, தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுடன் கலந்துபேசுவதாக டத்தோ ஸ்ரீ சரவணன் உறுதியளித்தார்.
நாடு முழுவதும் 11 மாநிலங்களிலிருந்து 300 ஆசிரியர்கள் பங்கேற்ற நேற்றைய மாநாட்டில் முக்கிய அம்சமாக கழகத்தின் கொள்கைப் பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரபல உள்ளூர் இசையமைப்பாளர் ஜே அப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
அதோடு, ஆசிரியர்களுக்கான சுகாதார பரிசோதனை தொடர்பில் பேசுவதற்காக இந்தியாவின் பிரபல அப்போலோ மருத்துவமனையின் உயரதிகாரிகளும் மாநாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.