கோலாலம்பூர், அக்டோபர்-12, டிக் டோக்கின் தாய் நிறுவனமான ByteDance Ltd உலகளவில் மேற்கொண்டுள்ள மாபெரும் வேலை நீக்கத்தில் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு, சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ உதவத் தயாராக உள்ளது.
அவர்களுக்கு சொக்சோவின் வேலைத் தேடல் அலவன்ஸ் திட்டத்தின் கீழ் 3 முதல் 6 மாதங்களுக்கு, மாற்று வருமானம் கிடைக்கும்.
வேலைவாய்ப்பு காப்பீட்டு முறைக்கான பங்களிப்பு சரிபார்க்கப்பட்டு, தகுதிப் பூர்த்திச் செய்யப்பட்டதும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென, நேற்று வெளியிட்ட அறிக்கையில் சொக்சோ கூறியது.
அவரவர் தேவைக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளுடன், MYFutureJobs வாயிலாகக் கிடைக்கப் பெறும் புதிய வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களும் அவர்களுக்கு வழங்கப்படும்.
மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ByteDance பணிநீக்கம் செய்திருப்பதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.
உலகளவில் தனது செயல்பாட்டு முறையை தொடர்ந்து வலுப்படுத்தும் விதமாக, மேலும் சில நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்படவுள்ளதை டிக் டோக் நேற்று உறுதிச் செய்ததும் குறிப்பிடத்தக்கது.