பேராக், அக்டோபர் 15 – வியாசி அகடாமிக் ஏற்பாட்டில் தேசிய அளவில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கான பள்ளிப்பாடல் காணொளிப் போட்டியில், பேராக் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி முதல் நிலையை தன் வசமாக்கியது.
இப்போட்டிக்கு நீதிபதியாகப் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பணியாற்றியிருக்கிறார்.
பொருத்தமான வரிகளுடன் ஆசிரியை தமிழரசி எழுதிய பள்ளி பாடலுக்கு, இசை அமைப்பாளர் சரண் நாராயணன் இசையமைக்க, பள்ளி மாணவர்கள் பாடலைப் பாடினர் என அப்பள்ளியின் தலைமையாசிரியர் சாந்தி கணேசன் தெரிவித்தார்.
குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளியாக பேராக், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி இருப்பினும், தனக்கென ஒரு பள்ளிப்பாடலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது பெருமைக்குரியது.
இப்போட்டியில், இரண்டாம் நிலையை தைப்பிங் சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளியும், மூன்றாம் நிலையை நெகிரி செம்பிலான் சிலியாவ் தமிழ்ப்பள்ளியும் வாகை சூடியது.