தாவாவ், அக்டோபர்-16, சபா, தாவாவில் பதின்ம வயது பெண்ணின் iPhone 13 விவேகக் கைப்பேசியைத் திருடிய சந்தேகத்தில், கணவன் மனைவி கைதாகியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் Batu 8, Jalan Apas-சில் உள்ள வீடமைப்புப் பகுதியில் அத்திருட்டு நிகழ்ந்தது.
முகநூலில் விளம்பரம் செய்திருந்தது போல், தனது iPhone 13 கைப்பேசியை 2,600 ரிங்கிட் விலையில் வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்த அத்தம்பதியை, சம்பவத்தன்று 17 வயது அப்பெண் சென்று சந்தித்துள்ளார்.
அப்போது பேசியப் பணத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரது வங்கிக் கணக்கில் போட்டதற்கான ஆதாரத்தை screenshot எடுத்து அத்தம்பதியர் காட்டியுள்ளனர்.
இருவரும் கைப்பேசியைப் பிடித்து நிற்பது போல் படமெடுப்பதற்காக, காரிலிருந்து இறங்கி வருமாறு அப்பெண் கேட்டுள்ளார்.
எனினும் அதற்கு மறுத்ததோடு, மனைவி கர்ப்பமாக இருப்பதால் தலை சுற்றுவதாகவும் கூறி காரிலேயே உட்கார்ந்துள்ளனர்.
இருவரின் நடவடிக்கையிலும் சந்தேகம் கொண்ட அப்பெண் உடனடியாக தாயாரை அழைத்து பணம் வந்து விட்டதா என கேட்டுள்ளார்.
வங்கிக் கணக்கில் பணமேதும் வரவில்லையென தாயார் கூறியதால் அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.
அத்தம்பதியோ கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பேசியோடு கம்பிநீட்டினர்.
இதையடுத்து இருவரையும் கைதுச் செய்த போலீஸ், விசாரணைக்கு உதவ மேலுமிரு உள்ளூர் ஆடவர்களையும் கைதுச் செய்தது.
திருடப்பட்ட iPhone 13 கைப்பேசியும் மீட்கப்பட்டது.