
ஈப்போ, அக் 22 – தனது முயலுக்கு உணவு வழங்கத் தவறியதால் அது மரணம் அடைவதற்கு காரணமாக இருந்ததாக வர்த்தகர் ஒருவர் மீது ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 43 வயதுடைய
சைராசி ஜமால் ஹத்துன் ( Shairazi Jamal Hatun) தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தார். தான் வளர்த்துவந்த இரண்டு முயல்களுக்கு அவர் தீனி மற்றும் நீர் வழங்கவில்லை என்றும் அதனால் ஒரு முயல் மடிந்ததோடு மற்றொரு முயல் உடல் நலிவடைந்ததாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலை 11 மணிக்கு கம்போங் கெப்பாயாங் ஜாலான் சிம்பாங் பூலாயில் (Simpang Pulai ) சைராசி இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டு எதிர்வரும் நவம்பர் 28 ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்காக செவிமடுக்கப்படும்.