செத்தியாவான், நவம்பர்-9, பேராக், செத்தியாவானில் ஊராட்சி மன்றத்தால் பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படும் பத்துக்கும் மேற்பட்ட நாய்களின் சடலங்களும், உயிருள்ள சில குட்டிகளும் பெரிய குழியில் வீசப்பட்ட வீடியோக்கள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மஞ்சோங் நகராண்மைக் கழகத்தின் முன்னாள் உறுப்பினர் Khairil Azhar Khairuddin அவற்றை பதிவேற்றியுள்ளார்.
குப்பைகளை அழிக்குமிடத்தில் 4 அடி ஆழத்தில் உள்ள குழியில் நாய்கள் வீசப்பட்டுள்ளன.
புதிதாக வீசப்பட்ட மற்றும் அழுகி வரும் சடலங்களுக்கு மத்தியில் சில நாய் குட்டிகள் சிக்கிக் கொண்டு அழுவது பார்ப்போரின் மனதை பதற வைக்கிறது.
செத்தியாவான் வட்டாரத்தில் உள்ள புறநகர் பகுதிகள் சுற்றித் திரியும் நாய்களை சுட்டுக் கொன்று பெரியக் குழிகளில் ஒன்றாக போட்டுப் புதைப்பது தற்போது ஒரு பழக்கமாக இருந்து வருவதாக, விலங்குகள் நல ஆர்வலருமான Khairil சொன்னார்.
அக்குழியிலிருந்து 3 நாய் குட்டிகள் காப்பாற்றப்பட்டு, அவை தொடர்ந்து அச்சத்திலும் பசியிலும் அழுவது ஒரு வீடியோவில் தெரிகிறது.
இன்னொரு இடத்திலிருக்கும் அதே போன்றதொரு குழியில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மத்தியில் 9 நாய்களின் சடலங்கள் இருப்பதை மற்றொரு வீடியோவில் காண முடிகிறது.
இந்த அதிர்ச்சி வீடியோக்கள் அம்பலமாகியிருப்பது குறித்து மஞ்சோங் நகராண்மைக் கழகம் இன்னும் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.