கோலாலம்பூர், டிசம்பர்-1,கோலாலம்பூர், ஜாலான் TAR மற்றும் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ளூர் வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தி போலி துணிமணிகளை விற்று வந்த பாகிஸ்தானிய வியாபாரி சிக்கியுள்ளார்.
KPDN எனப்படும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கடந்த வியாழக்கிழமை அங்கு அதிரடிச் சோதனை நடத்திய போது, அவ்வியாபாரியின் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, முஸ்லீம் பெண்கள் தொழுகைக்குப் பயன்படுத்தும் 2,753 telekung துணிகள், 2,100 கைப்பைகள் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மதிப்பு 105,855 ரிங்கிட் எனக் கூறப்படுகிறது.
2019 வர்த்தக முத்திரைச் சட்டத்தின் கீழ் கைதான அந்த பாகிஸ்தானியர், வாக்குமூலம் பெறப்பட்ட பிறகு அதே நாளில் விடுவிக்கப்பட்டார்.
தற்காலிக வேலை பெர்மிட்டில் மலேசியாவுக்குள் நுழைந்த அவ்வாடவர், உள்ளூர் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, முறையற்ற ஆவணங்களுடன் இங்கேயே தங்கியுள்ளதும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.