
இஸ்கண்டார் புத்ரி, டிசம்பர்-3 – ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் முதுகில் மாட்டும் பையில் வைத்தே தனி ஆளாக போதைப்பொருள் விநியோகித்து வந்த வேலையில்லாத ஆடவன் கைதாகியுள்ளான்.
முத்தியாரா ரினியில் நவம்பர் 28-ஆம் தேதி 33 வயது அந்த உள்ளூர் ஆடவன் கைதானதாக இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் துணை ஆணையர் எம். குமராசன் கூறினார்.
பொந்தியானைச் சேர்ந்த அவ்வாடவன், இஸ்கண்டார் புத்ரி, ஜோகூர் பாரு உள்ளிட்ட வட்டாரங்களில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கும் கேளிக்கை மையங்களுக்கும் போதைப் பொருளை விற்று வந்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
அவன் கைதான போது, 3,115 கிராம் எடையிலான எக்ஸ்தசி வகைப் போதைப் பொருள், 9.9 கிராம் எடையிலான கெத்தமின் போதைப் பொருள், 1.4 கிராம் ஷாபு வகைப் போதைப் பொருள், 4.2 கிராம் எடையிலான எக்ஸ்தசி போதை மாத்திரைகள், 1.14 கிராம் எடையிலான erimin5 மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவனது முதுகுப் பையிலிருந்த மொத்த போதைப் பொருட்களின் மதிப்பு 523,039 ரிங்கிட்டாகும்.
அவற்றை 3,500 போதைப் பித்தர்கள் பயன்படுத்தலாம் என போலீஸ் கூறியது.
கைதான போது அவனும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதிச் செய்யப்பட்டது.
1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக, 29 நவம்பர் தொடங்கி 5 நாட்களுக்கு அவ்வாடவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.