கோலாலம்பூர், டிசம்பர்-11 – மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து வாய்ப்புக் கிடைக்காத இந்திய மாணவர்களுக்காக, பெர்டானா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘மருத்துவர் எனது கனவு’ திட்டத்தை மித்ரா அறிமுகப்படுத்தியுள்ளது.
இது, 2024/2025 கல்வியாண்டில் மெட்ரிகுலேஷன் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வில் குறைந்தபட்சம் 3.5 மதிப்பெண்களைப் பெற்ற இந்திய மாணவர்களுக்கான முழு மற்றும் பகுதி உபகாரச் சம்பள வாய்ப்பாகும்.
மித்ரா தலைவர் பி.பிரபாகரன் இன்று அதனை அறிவித்தார்.
MUET ஆங்கில மொழித் தேர்வில் குறைந்தபட்சம் Band 4 வைத்திருப்போர், எஸ்.பி.எம் தேர்வில் 5 அறிவியல் பாடங்களில் குறைந்தது B தேர்ச்சிப் பெற்றோர் மற்றும் STR எனும் ரஹ்மா ரொக்க உதவிப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும்.
மித்ராவும் பெர்டானா பல்கலைக்கழகமும் இணைந்து தேர்வுச் செய்யும் 10 மாணவர்களுக்கு முழு உபகாரச் சம்பளமும், மற்ற 40 மாணவர்களுக்குப் பகுதி உபகாரச் சம்பளமும் PTPTN கடனுதவியும் வழங்கப்படும்.
தகுதிப் பெற்ற மாணவர்கள் இன்று முதல் டிசம்பர் 17 வரை விண்ணப்பிக்கலாம் என பிரபாகரன் கூறினார்.
இந்தியச் சமூகத்தின் கல்வி இலக்கை மாற்றும் மித்ராவின் முயற்சியை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.