கோலாலம்பூர், டிசம்பர்-18, Facebook மூலம் அறிமுகமான வெளிநாட்டுக் காதலர்களின் வலையில் சிக்கி, 4.7 மில்லியன் ரிங்கிட் பணத்தை பறிகொடுத்துள்ளனர் உள்ளூரைச் சேர்ந்த 2 மூதாட்டிகள்.
முதல் சம்பவத்தில், 2017 முதல் தனக்கு அறிமுகமான வெளிநாட்டு இணையக் காதலனை நம்பி, 2.2 மில்லியன் பணத்தைப் பறிகொடுத்து நிற்கிறார் ஒரு கணக்காய்வாளரான 67 வயது மூதாட்டி.
சபாவைச் சேர்ந்த அவருக்கு facebook வாயிலாக அந்த அமெரிக்க ஆடவருடன் பழக்கமேற்பட்டது.
சிங்கப்பூருக்கு மருத்துவ உபகரணங்களைத் தருவிக்கும் வர்த்தகர் என அவ்வாடவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
ஒரே மாதத்தில் உறவு அணுக்கமாகி இருவரும் காதலர்களாகினர்.
திடீரென ஒருநாள், தான் மலேசியாவுக்கே வந்து குடியேற விரும்புவதாகவும், பயணச் செலவுக்குப் பணம் தேவைப்படுவதாகவும் அந்நபர் கூறியுள்ளார்.
காதலனுக்கு உதவுவதாக எண்ணி, அவர் கொடுத்த வங்கிக் கணக்கில் 5,000 ரிங்கிட் பணத்தை அம்மூதாட்டி போட்டுள்ளார்.
ஆனால், அதுவே அவருக்குக் கடைசியாக இருக்கவில்லை; காரணம் அமெரிக்க காதலன் சொந்தப் பிரச்னை, வர்த்தகப் பிரச்னை என பல்வேறு காரணங்களைக் கூறி தொடர்ந்து பணம் கேட்டு நச்சரித்துள்ளார்.
காதல் மயக்கத்திலிருந்த மூதாட்டி, 50 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 306 தடவையென மொத்தமாக 2.2 மில்லியன் ரிங்கிட்டை மாற்றியுள்ளார்.
அதில் பாதிப் பணம் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் கடன் வாங்கியதாகும்.
இந்நிலையில், கடந்த மாதம் பேச்சு வாக்கில் தனது நெருங்கியத் தோழியிடம் அமெரிக்க இணையக் காதலன் குறித்து பேசிய போதே, தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அம்மூதாட்டி போலீசில் புகார் செய்தார்.
இவ்வேளையில், மற்றொரு மூதாட்டியும் இதே போன்ற ‘love scam’ மோசடிக்கு ஆளாகி சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட்டை இழந்திருப்பதாக
புக்கிட் அமான் வர்த்தக் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரம்லி மொஹமட் யூசோஃப் (Datuk Seri Ramli Mohamed Yoosuf) தெரிவித்தார்.
இவருக்கோ இங்கிலாந்தைச் சேர்ந்தவர் இணையக் காதலர்.
அவரும் மலேசியா வருவதாகவும், பின்னர் சுங்கத் துறையால் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து வெளியேற பணம் செலுத்த வேண்டுமென்றும் பல ‘கதைகளைக்’ கூறியுள்ளார்.
அனைத்தையும் நம்பிய அம்மாது, 13 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 13 தடவையென சுமார் 2.47 மில்லியன் ரிங்கிட்டை போட்டுள்ளார்.
தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால் ‘காதலன்’ மீது சந்தேகம் வந்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
இரு மோசடி சம்பவங்களும் குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக, டத்தோ ஸ்ரீ ரம்லி கூறினார்.