குவாலா திரங்கானு, டிசம்பர்-26 – குவாலா திரங்கானுவில் மஸ்ஜித் லாடாங் எனப்படும் அல் முக்தாஃபி பில்லா ஷா மசூதியில் நாளை வெள்ளிக்கிழமை ஓர் ஆடவருக்குப் பிரம்படி தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதால், 40 போலீஸ்காரர்கள் பணியிலமர்த்தப்படுவர்.
யாரும் சினமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடாதிருப்பதை உறுதிச் செய்யவே அந்த முன்னேற்பாடென, மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அஸ்லி மொஹமட் நூர் (Azli Mohd Noor) தெரிவித்தார்.
பிரம்படி தண்டனை வழங்கப்படும் வளாகத்தில் வெறும் 70 பேருக்கு மட்டுமே அனுமதியுண்டு.
அங்கு நடப்பதை எதையும் பதிவுச் செய்ய அனுமதியில்லை; பதிவுச் செய்யக் கூடிய எந்தவொரு தொடர்புக் கருவிகளும் மின்னியல் சாதனங்களும் உள்ளே கொண்டுச் செல்லப்படக் கூடாது.
அதோடு வெள்ளிக்கிழமைத் தொழுகை முடிந்த கையோடு பொது மக்கள் மஸ்ஜித் லாடாங்கிலிருந்து உடனடியாக வெளியேறி விடுமாறு, அஸ்லி கேட்டுக் கொண்டார்.
மசூதி வளாகத்திலோ வெளியிலோ நின்று வேடிக்கைக் பார்க்க வேண்டாமென்றும் அவர் நினைவுறுத்தினார்.
தண்டனை நிறைவேற்றத்தை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்; பிரச்னை செய்யக்கூடாது என்றார் அவர்.
நாளை Mohd Affendi Awang எனும் 42 வயது நபர் திரங்கானுவில் மக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனையைப் பெறவிருக்கும் முதல் நபராகிறார்.
மறுபடியும் மறுபடியும் கல்வத் குற்றத்தைப் புரிந்ததை ஒப்புக் கொண்டதை அடுத்து, மாநில இஸ்லாமிய ஷாரியா சட்டத்தின் கீழ், குவாலா திரங்கானு ஷாரியா நீதிமன்றம் நவம்பர் 20-ஆம் தேதி அவ்வாடவருக்கு 6 பிரம்படிகள் விதித்து தீர்ப்பளித்தது.