லண்டன், டிசம்பர்-29 – AI அதிநவீன தொழில்நுட்பத்தால் மனிதகுலம் பேராபத்தில் சிக்குமென, பிரிட்டிஷ்-கனடிய கணினி விஞ்ஞானி ஒருவர் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளார்.
அவர் யாரோ எவரோ அல்ல; அந்த செயற்கை நுண்ணறிவின் பிதாமகர் என அழைக்கப்படும் பேராசிரியர் ஜியோஃப்ரி ஹிண்டன் (Geoffrey Hinton) தான்.
தற்போதைய நிலையில், மனிதனின் ஆற்றலை விட AI-யின் ஆற்றல் மேம்பட்டதாக இல்லை;
எனினும், அடுத்த 20 ஆண்டுகளில் மனிதனை விட அறிவாளியான AI உருவாக்கப்படும்.
அப்போது, மனித மூளை சேகரிக்கக்கூடிய அல்லது process செய்யக் கூடிய தரவுகளை விட, மிக அதிகமான தரவுகளைச் சேகரிக்க கூடிய நிலையை நிச்சயம் AI எட்டி விடும்.
அது நடந்து, தவறான கைகளில் சிக்கி, தவறான நோக்கங்களுக்கு AI பயன்படுத்தப்படும் பட்சத்தில், மனிதகுலத்திற்கான ஆபத்துகள் பயங்கரமானவையாக இருக்குமென ஹிண்டன் எச்சரித்துள்ளார்.
சுருக்கமாகச் சொன்னால், மனிதனின் நுண்ணறிவே அவனுக்கு எதிராக மாறலாம் என்கிறார் அவர்.
AI தொழில்நுட்பம், மனிதகுலத்தின் அழிவுக்கு வித்திட 10 விழுக்காடு வாய்ப்பிருப்பதாக முன்பு கூறியிருந்த ஹிண்டன், AI-யின் அசுர வளர்ச்சியைப் பார்க்கும் போது 10-திலிருந்து 20 விழுக்காடு வரை அதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்.
எனவே, AI-யின் வளர்ச்சியை அனைவருமே மிக கவனத்தோடும் எச்சரிக்கையோடும் அணுக வேண்டுமென, வேதியல் துறைக்கான இவ்வாண்டின் நோபல் பரிசை வென்றவரான 75 வயது ஹிண்டன் கூறினார்.