
தெலுக் இந்தான், ஜனவரி-14, சிறு சிறு குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் வீசியதாகக் குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு தகுந்த சமூகச் சேவை தண்டனையை, நீதிமன்றங்களே முடிவுச் செய்யும்.
KPKT எனப்படும் வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் (Nga Kor Ming) அதனை அறிவித்துள்ளார்.
கால்வாய்களை சுத்தம் செய்வது, சாலைகளைக் கூட்டிப் பெருக்குவது, பொது கழிவறைகளைக் கழுவுவது போன்றவை அத்தண்டனைகளில் அடங்கும்.
சம்பந்தப்பட்டவர்கள் குறைந்தபட்சம் 2 மணி நேரங்களுக்குத் துப்புரவுப் பணியில் ஈடுபட வேண்டுமமென்றா அவர்.
ஒருவேளை நீதிமன்றம் 4 நாட்களுக்கு சாலையைப் பெருக்க வேண்டும் என தீர்ப்பளித்தால், அவர்கள் 4 நாட்களுக்கு பெருக்கத்தான் வேண்டும்.
அமைச்சின் வேலை நடப்பு சட்ட விதிகளை திருத்துவது மட்டுமே என, ஙா கோர் மிங் கூறினார்.
கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவோருக்கு 300 ரிங்கிட் அல்லது 500 ரிங்கிட் அபராதம் விதிப்பதை விட, இது போன்ற சமூக சேவை தண்டனைகள் ஆக்கப்பூர்வமான பலனைத் தருமென்றார் அவர்.
அவர்களுக்கு ஒரு பாடமாக விளங்கும் வகையிலும் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த சமூகச் சேவைத் தண்டனை விதிக்கப்படவுள்ளது.
அது தொடர்பான சட்டத் திருத்தம், வரும் மார்ச் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என KPKT ஏற்கனவே கூறியிருந்தது.
குப்பைகளை வீசுவோரை அடையாளம் காண குறிப்பிட்ட இடங்களில் CCTV கேமராக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது.