
புத்ரா ஜெயா, ஜன 15 – 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம்தேதி முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதிவரை Cashless Boleh 4.0 எனும் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் இயக்கத்தின் மூலம் மொத்தம் 138 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேலான பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன.
பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட 20 அரசு நிறுவனங்களின் மொத்தத்தில் இது 86 விழுக்காடாகும் என நிதித்துறை துணையமைச்சர் லிம் ஊய் யிங் ( Lim Hui Ying ) தெரிவித்தார்.
இந்த ஆண்டு நாம் 5ஆவது கட்ட ரொக்கமில்லா பண பரிவர்த்தனை இயக்கத்தை மேற்கொள்ளவிருப்பதால் , இதில் 80க்கும் மேற்பட்ட கூட்டரசு நிறுவனங்களின் ஈடுபாட்டை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.
நாட்டின் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை சூழலை வலுப்படுத்த இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என இன்று நடைபெற்ற ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கான 4.0 இயக்கத்திற்கான விருது வழங்கும் விழாவில் லிம் இத்தகவலை வெளியிட்டார்.
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை இயக்கமானது , மலேசியாவின் பொதுத் துறையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை விரைவுபடுத்தும் நோக்கத்தை கொண்டு Payments Network Malaysia Sdn Bhd (PayNet) மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்பாடாகும்.