Latestஉலகம்மலேசியா

பிரிட்டனில் மலேசியாவின் தனித்தன்மைமிக்க மாபெரும் முதலீட்டு மையத்திற்கு பிரதமர் அன்வார் வருகை

லண்டன், ஜனவரி-17,பிரிட்டனுக்கு 5-நாள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், லண்டனில் உள்ள Battersea Power Station நிலையத்திற்கு நேற்று வருகை மேற்கொண்டார்.

தேம்ஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள அந்நிலையம், ஐரோப்பாவில் மலேசிய அரசாங்கத்தின் பெரிய முதலீடாகும்.

PNB, Sime Darby, SP Setia, EPF ஆகிய மலேசியக் குழும நிறுவனங்கள் அதன் உரிமையாளர்களாகும்.

பிரதமர் தலைமையிலான பேராளர் குழுவை, Battersea Project Holding Company Ltd தலைவர் Tan Sri Shahril Ridza Ridzuan எதிர்கொண்டு வரவேற்றார்.

அம்மையத்தில் 16.97 ஹெக்டர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புத் திட்டம் குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அங்குள்ள வசதி கட்டமைப்புகள் கண்டு வியந்த டத்தோ ஸ்ரீ அன்வார், அரசாங்க சார்பு நிறுவனங்களுக்கு அது நல்ல இலாபத்தை கொண்டு வரும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஐரோப்பாவின் மிகப் பெரிய புனரமைப்புத் திட்டமான இந்த Battersea Power Station வளாகம், 4,000 புதிய வீடுகள், 3.5 மில்லியன் சதுர அடியில் கலப்பு வணிக வளாகம், 7.69 ஹெக்டர் நிலப்பரப்பில் பொது இடம் ஆகியவற்றோடு 20,000 வேலை வாய்ப்புகளை உள்ளடக்கியதாகும்.

அதன் கட்டுமானம் பாதி பூர்த்தியடைந்து விட்டது.

2022 அக்டோபரில் பொது மக்களுக்குத் திறக்கப்பட்டது முதல், Battersea Power Station வளாகம் 24 மில்லியனுக்கும் மேற்பட்ட வருகையாளர்களைப் பெற்றுள்ளது.

பல்வேறு கடைகள், உணவகங்கள், ஆற்றங்கரையில் ஐஸ் சறுக்கு உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகள், லண்டன் மாநகரின் இரம்மியமான அழகைக் கண்டு களிக்கக் கண்ணாடி லிப்ட் வசதி என வருகையாளர்களைக் கவரும் அம்சங்களை அம்மையம் தன்னகத்தே கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!