
கூனாக், ஜனவரி-28, சபா, கூனாக்கில் சனிக்கிழமை நிகழ்ந்த சம்பவத்தில் பேருந்து நிலையமருகே தெருநாய்கள் கொடூரமாகத் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
60 வயது மதிக்கத்தக்க அம்மாதுவை 10-க்கும் மேற்பட்ட நாய்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ காட்சிகள், மூதாட்டியைச் சுற்றி நாய்கள் கூட்டமாக நிற்பதையும், பின்னர் கடித்துக் குதறுவதையும் காட்டுகின்றன.
பேருந்து நிலையமருகே பெண்ணின் சடலம் இருப்பதாக காலை 6.30 மணியளவில் பொதுமக்களிடமிருந்து போலீஸுக்கு தகவல் சென்றது.
இதையடுத்து சம்பவ இடம் விரைந்த போலீஸார், ஆடைகள் எதுவுமின்றி அவரின் உடலைக் கண்டெடுத்தனர்.
உடலில் நாய்கள் கடித்ததற்கான அடையாளங்கள் இருந்ததாக, கூனாக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் சபாருடின் ரஹ்மாட் கூறினார்.
எனினும் அவரிடம் அடையாள ஆவணங்களும் எதுவும் இல்லை.
CCTV கேமரா பதிவைப் பார்த்ததில், விடியற்காலை 1.50 மணியளவில் நாய்கள் அவரைத் தாக்கியுள்ளன.
மூதாட்டியின் உடல் சவப்பரிசோதனைக்காக தாவாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சபாருடின் சொன்னார்.