
புத்ராஜெயா, ஜனவரி-30 – மலேசியர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்கள் PR எனப்படும் நிரந்தர வசிப்பிடத் தகுதிக்கு விண்ணப்பிக்க, இனி 3 ஆண்டுகள் மட்டுமே காத்திருக்க வேண்டும்.
இதுநாள் வரை அதற்கு விண்ணப்பிக்க அவர்கள் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்த நிலையில், உள்துறை அமைச்சான KDN அறிக்கை வாயிலாக இப்புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
எனினும், மலேசியர்களைத் திருமணம் செய்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆன வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்கள் PR க்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவதற்கு முன்பு, குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு LTSVP எனப்படும் நீண்ட கால சமூகப் பயண அட்டையை வைத்திருக்க வேண்டும்.
அதே சமயம், விண்ணப்பத்தாரர்கள் மத்தியில் குழப்பமானதாகவும் கடினமானதாகவும் பார்க்கப்பட்ட, PR விண்ணப்பங்களுக்கான புள்ளிகள் அடிப்படையிலான மதிப்பீட்டு முறையும் அகற்றப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன, தம்பதியருக்கு இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை போன்ற அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
இப்புதிய மாற்றங்கள் குடும்ப அமைப்பை ஆதரிப்பதிலும், அரசின் கொள்கைகள் ஆக்கப்பூர்வமானதாகவும் அனைத்து தரப்பினருக்கும் நியாயமானதாகவும் இருப்பதை உறுதிச் செய்யுமென KDN நம்பிக்கைத் தெரிவித்தது.
இம்மாற்றங்கள் செப்டம்பர் இறுதியில் தொடங்கும் நிலையில், புதிய PR விண்ணப்பங்கள் 6 மாதங்களில் பரிசீலிக்கப்படும்.
வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்களுக்கான PR விண்ணப்ப நடைமுறைகளில், இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் சீர்திருத்தங்களை கொண்டு வர அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.