
சிங்கப்பூர், பிப்ரவரி-16 – போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு, வரும் வியாழக்கிழமை அத்தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
38 வயது பன்னீர் இன்னும் 4 நாட்களில் தூக்கிலிடப்படவிருப்பதாக, சிங்கப்பூர் சிறைச்சாலை சேவைத் துறை அவரின் சகோதரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
பன்னீரின் முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி தனது facebook பக்கத்தில் அத்தகவலைப் பகிர்ந்துள்ளார்.
தற்போதைக்கு பன்னீருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, மனித உரிமைச் சட்டத்தின் கீழ் அவரின் மரண தண்டனை நிறைவேற்றத்தை எதிர்த்து, மலேசிய அரசாங்கம் அனைத்துலக நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பதாகும் என ரவி சொன்னார்.
2014 செப்டம்பர் 3-ஆம் தேதி வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 51.84 கிராம் எடையிலான diamorphine வகைப் போதைப்பொருளைக் கடத்திய வழக்கில், 2017-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி பன்னீர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2019 மே மாதமே அவர் தூக்கிலிடப்படவிருந்தார்; ஆனால் தனது பொது மன்னிப்புக் கோரிக்கையை அப்போதைய சிங்கப்பூர் அதிபர் நிராகரித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் பன்னீருக்கு வாய்ப்பு வழங்கி, மரண தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.