
சுங்கை பூலோ, மார்ச்-3 – கிராம தங்கும் விடுதிகள் மற்றும் மலிவுக் கட்டண ஹோட்டல்களைத் தளங்களாகப் பயன்படுத்தி, கள்ளக் குடியேறிகளைக் கடத்தி வந்த Geng Herman கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர், சுங்கை பூலோவில் உள்ள ஒரு கிராம தங்கும் விடுதி மற்றும் பட்ஜெட் ஹோட்டலில் புக்கிட் அமான் மேற்கொண்ட 2 சோதனைகளின் போது, அக்கும்பலைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 15 பேர் பிடிபட்டனர்.
22 வயது முதல் 53 வயதிலான அவர்கள் அனைவரும் இந்தோனீசியர்களாவர்.
மலேசியாவுக்குள் நுழையவோ அல்லது இங்கிருந்து வெளியேறவோ, ஒரு தலைக்கு 1,800 ரிங்கிட்டிலிருந்து 2,000 ரிங்கிட் வரை கட்டணம் விதிக்கப்படுவது, தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்தோனீசியாவில் உள்ள முகவர்களிடம், கள்ளக் குடியேறிகள் அக்கட்டணத்தைச் செலுத்துகின்றனர்.
இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கடத்தல் நடவடிக்கை, கடந்த 2 மாதங்களாகவே கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
கைதானவர்கள் மேல் விசாரணைக்காக சுங்கை பூலோ போலீஸ் தலைமையகம் கொண்டுச் செல்லப்பட்டனர்.