
செர்டாங், மார்ச்-4 – பிப்ரவரி 25-ஆம் தேதி சிலாங்கூர், பண்டார் புத்ரி பூச்சோங்கில் பெண் பாதுகாவலர் தாக்கப்பட்டது தொடர்பில், 42 வயது மேகவன் செல்வராஜு எனும் ஆடவரை போலீஸ் தேடுகிறது.
குற்றவியல் சட்டத்தோடு அரிக்கும் பொருட்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டடத்தின் கீழ் அவ்வாடவரை விசாரிக்க வேண்டியிருப்பதாக, செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் AA அன்பழகன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 32 வயது பெண் போலீஸில் புகார் செய்திருப்பதையும் அன்பழகன் உறுதிப்படுத்தினார்.
பண்டார் புத்ரி பூச்சோங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், பெண் பாதுகாவலர் அவருக்கு அறிமுகமான ஆடவரால் தாக்கப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
தனது காதல் நிராகரிக்கப்பட்டதால் சினமடைந்து அந்நபர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
அச்சம்பவம் வீடியோவில் பதிவாகி facebook-கிலும் வைரலானது.