
கோலாலம்பூர், மார்ச்-11 – இஸ்லாமிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்துடனான பொது விவாதத்தை இரத்து செய்துள்ள ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணனை, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் பாராட்டியுள்ளார்.
ஏரன் மற்றும் போலீஸின் அறிவுரையை ஏற்று அம்முடிவுக்கு வருவதாக முன்னதாக அந்த தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்தார்.
நாட்டின் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க சரவணன் ஒரு பொறுப்பான முடிவை எடுத்துள்ளார்; எனவே, மதம் குறித்த விவாதத்தைத் தொடர வேண்டாம் என்ற சரவணனின் முடிவுக்கு நன்றித் தெரிவித்துக் கொள்வதாக ஏரன் சொன்னார்.
பல்லின – மத மற்றும் கலாச்சார பின்னணிகளைக் கொண்ட மலேசியர்களிடையே ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்துவதில் இந்த முடிவு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்று அவர் கூறினார்.
ஒற்றுமை என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது நமது அன்றாட நடவடிக்கைகள் மற்றும் அணுகுமுறைகளில் பிரதிபலிக்க வேண்டும்.
புரிதல், மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளல் ஆகிய கொள்கைகள் இந்த முயற்சியில் மிக முக்கியமானவை என்றார் அவர்.
இது எதிர்கால சந்ததியினருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என அறிக்கையொன்றில் அமைச்சர் கூறினார்.
காவடி ஏந்துபவர்கள் குறித்த சம்ரியின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் தூண்டப்பட்ட அவ்விவாதம், மார்ச் 23 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது.
அதனை மலேசிய தமிழ் மொழி மன்றம் ஏற்பாடு செய்யுமென அறிவிக்கப்பட்டிருந்தது.