
தைப்பிங், மார்ச்-13 – தாப்பா, ஆயர் கூனிங்கில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் அசான் தொழுகை அழைப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக facebook-கில் பதிவிட்ட ஆடவரிடம், மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையம் MCMC விசாரணை நடத்தியுள்ளது.
3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் குறித்து மார்ச் 9-ஆம் தேதி தவறான செய்தியைப் பதிவேற்றியதற்காக, 47 வயது அந்நபரிடம் தைப்பிங்கில் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டது.
தடயவியல் சோதனைக்காக அவரின் கைப்பேசியும் சிம் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகபட்சம் 500,000 ரிங்கிட் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் திருத்தப்பட்ட தொடர்பு-பல்லூடக சட்டத்தின் கீழ் அவ்வாடவர் விசாரிக்கப்படுகிறார்.
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வந்ததிலிருந்து அந்த பள்ளிவாசலில் அசான் தொழுகைக்கு ஒலிப்பெருக்கி பயன்படுத்தப்படுவதில்லையென அந்நபர் சர்ச்சைக்குரிய வகையில் பதிவேற்றியிருந்தார்.
அதுவோர் அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இது போல் அவதூறுகள் பரப்பப்படுவது வழக்கம் தான் என்றும், பிரதமரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபாய்டா முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடக்கிறது.