
கோலாலம்பூர், பிப்ரவரி-24 – 18 உள்நாட்டு தகவல் ஊடக நிறுவனங்களின் டிக் டோக் கணக்குகள் அண்மையில் முடக்கப்பட்ட சம்பவம் குறித்து, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, டிக் டோக்கிடம் விளக்கம் கோரியுள்ளது.
தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
பத்தாங் காலியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் சிறுமி மீது மேற்கொள்ளப்பட்ட மானபங்க முயற்சி குறித்த செய்தியை வெளியிட்டதற்காகவே அக்கணக்குகள் முடக்கப்பட்டதாக, டிக் டோக்கின் தொடக்கக் கட்ட அறிக்கைத் தெரிவிக்கிறது.
“இது தான் AI தொழில்நுட்பத்திடம் உள்ள பிரச்னையாகும்; சில நேரங்களில் அது எல்லை மீறி விடுகிறது; இந்த விஷயத்தில், சாதாரண மக்கள் பதிவேற்றும் உள்ளடக்கங்களும் தகவல் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளும் ஒன்றல்ல என்பதை AI புரிந்துகொள்ளவில்லை.”
எனவே, கணக்கு முடக்கம் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிச் செய்ய, தகவல் ஊடகங்களின் டிக் டோக் கணக்குகள் மேலும் செம்மைப்படுத்தப்பட வேண்டும்; அது குறித்து விரைவிலேயே விவாதிக்கப்படுமென்றார் அவர்.
தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா ஏற்பாட்டில் தலைநகரில் நடைபெற்ற ‘செய்தி அறையில் AI’ (AI in the Newsroom) என்ற பயிற்சிப் பட்டறையை அறிமுகப்படுத்தியப் பிறகு ஃபாஹ்மி செய்தியாளர்களிடம் பேசினார்.
உள்ளூர் தகவல் ஊடகவியலாளர்களுக்கான AI பயிற்சித் தொடரின், முதல் பயிற்சி பட்டறை இதுவாகும்.
நவீன தகவல் ஊடகத் துறையில் AI தொழில்நுட்பத்தின் புரிதலையும் அதன் பயன்பாட்டையும் மேம்படுத்துவதுமே அதன் நோக்கமாகும்.
இந்த 2-நாள் பயிற்சியில் பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாசிரியர்கள், நிருபர்கள் என 40 பேர் பங்கேற்றனர்.