
அணுகுண்டே போட்டாலும் கரப்பான்பூச்சிகளால் தப்பிக்க முடியுமென சொல்லி கேள்விப் பட்டிருப்போம்.
ஆனால் அதை விட அதிசயமாக கரப்பான்பூச்சியின் பால் எதிர்காலத்தில் நமக்கான ஊட்டச்சத்து பாலாக விளங்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
கேட்பதற்கு சற்று தர்மசங்கடமாக இருந்தாலும், அறிவியலாளர்களின் கூற்று அதுதான்.
கரப்பான்பூச்சி பாலில் ஊட்டச்சத்துக்களின் சக்தியாகக் கருதப்படும் புரத படிகங்கள் உள்ளன.
இந்த பால், செல் வளர்ச்சிக்கு உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதோடு தீவிர ஆற்றலையும் அளிக்கக் கூடியது.
புரதச் சத்து, நல்ல கொழுப்பு, இயற்கை சீனி என அனைத்தும் கரப்பான்பூச்சியில் உள்ளனவாம்.
சுருக்கமாகச் சொன்னால் நமக்கு பசும் பாலிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகளை விட 3 மடங்கு அதிகமான ஊட்டச்சத்து கரப்பான்பூச்சி பாலில் கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஆனால் கரப்பான்பூச்சி பாலை அறுவடை செய்வதில் தான் பெரிய சிக்கலே உள்ளது.
பேக்கேட்டுகளில் பாலை அடைக்க, மில்லியன் கணக்கான தாய் கரப்பான்பூச்சிகள் தேவை.
ஆக, என்னதான் பசும்பாலுக்கு மாற்றாகக் கூறப்பட்டாலும், இது நடைமுறையில் சந்தைகளுக்கு வருவது இந்த இடைப்பட்ட காலத்தில் சாத்தியமில்லை.
ஆனால் எதிர்காலத்தில் உலக மக்களின் _Super food_ பட்டியலில் கரப்பான்பூச்சி பாலும் இணைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.