
சித்தியவான், மார்ச் 26 – மஞ்சோங் மாவட்ட தொடக்கப் பள்ளிகளுக்கான சதுரங்க போட்டியில் 18 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 162 மாணவர்கள் கலந்துகொண்டதோடு அப்போட்டியில் சித்தியவான் சுங்கை வாங்கி தோட்ட தமிழ்ப்பள்ளி, சித்தியவான் மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி , ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி , பெங்காலான் பாரு தமிழ்ப்பள்ளி ஆகியவற்றின் மாணவர்கள் அதிகமான பரிசுகளை வென்றனர்.
சுங்கை வாங்கி தோட்ட தமிழ்ப் பள்ளியின் பெற்றோர் ஆரிசியர் சங்கம், பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி பரமேஸ்வரி மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு இம்மாதம் 22 ஆம்தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டி மாலை மணி 4.30 வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
மாவட்ட ரீதியில் முதல் முறையாக சுங்கை வாங்கி தோட்ட தமிழ்ப் பள்ளி ஏற்று நடத்திய இந்த சதுரங்க போட்டியில் 13 தமிழ்ப் பள்ளிகள், மூன்று தேசிய பள்ளிகள் மற்றும் 2 சீனப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் மாணவிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
1,2,3 வகுப்பு மாணவர்களையும், மற்றும் 4,5,6 ஆகிய வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இப்போட்டி மாணவர்கள் மற்றும் மாணவிகள் என 4 பிரிவாக மொத்தம் ஆறு சுற்றுக்களாக நடைபெற்றது.
இப்போட்டியை மஞ்சோங் மாவட்ட மாணவர் மேம்பாடு உதவி கல்வி அதிகாரி முகமட் இசா அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்.
ஒவ்வொரு பிரிவிலும் 10 பேருக்கு பரிசுகள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதாக பள்ளியின் புறப்பாட பிரிவின் துணை தலைமையாசிரியரும் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான கணேசன் சண்முகம் தெரிவித்தார்.
நோன்பு காலத்திலும் அதிகமான மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டதோடு அவர்களுக்கு முழு உற்சாகமும் ஆதரவும் வழங்கிய அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கும் கணேசன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்