
சிங்கப்பூர், ஏப்ரல்-3- சிரியாவில் ஒரு ISIS போராளியை திருமணம் செய்து கொள்ள விரும்பியதோடு போர்களத்திலும் களமிறங்கத் தயாராக இருந்த 15 வயது மாணவி, சிங்கப்பூரில் கைதாகியுள்ளார்.
ISA எனப்படும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அக்குடியரசில் கைதுச் செய்யப்பட்ட முதல் பதின்ம வயது பெண் அவராவார். சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கே.ஷண்முகம் அதனை உறுதிப்படுத்தினார்.
2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்தே இணையம் வாயிலாக ISIS சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட அப்பெண், அடுத்த மாதமே அக்கும்பலுக்கான தனது விசுவாச உறுதிமொழியை மெய்நிகர் வாயிலாகக் கொடுத்துள்ளார்.
2023 ஜூலை 2024 டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், அந்த பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்களுடன் குறைந்தது 8 online உறவுகளையும் தொடங்கினார். ISIS-க்காகப் போராடும் நோக்கத்திற்காகப், போராளிகளாக மாற மகன்களை வளர்க்கவும், சிரியாவுக்குச் செல்ல பணத்தைச் சேமிக்கவும் அப்பெண் திட்டமிட்டிருந்தாள்.
இந்நிலையில் தான், சுயமாகத் தீவிரவாதமாக மாறிய அப்பெண்ணுக்கு எதிராக, கடந்த பிப்ரவரியில், சிங்கப்பூர் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஒரு தடை உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது, அனுமதியில்லாமல் சிங்கப்பூரை விட்டு அவர் வெளியே பயணிக்கவோ அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தவோ முடியாது.
ISIS போராளிகளின் மனைவிகளாகி மாறுவதன் மூலம் சிரியாவிற்குச் சென்று ISIS நோக்கத்தை ஆதரிக்க விரும்பும் பதின்ம வயது பெண்களின் உலகளாவிய போக்கை, இந்த சிங்கப்பூர் பதின்ம வயதுப் பெண்ணின் சம்பவம் பிரதிபலிப்பதாக, உள்நாட்டு பாதுகாப்புத் துறை கூறியது.