
கோலாலம்பூர், ஏப்ரல்-15, இந்தியர்களின் மகத்தான் ஆதரவுடன் மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்த மடானி அரசாங்கத்தின் மீது, இன்றைக்கு அச்சமூகம் அதிருப்தி கொண்டிருப்பது உண்மைதான்.
DAP தேசிய உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அருள் குமார் ஜம்புநாதன் அதனை ஒப்புக் கொண்டுள்ளார்.
என்றாலும், அந்த அதிருப்திகளைக் களைந்து, பிரச்னைகளுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
பல நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் துருப்புச் சீட்டாக இந்திய வாக்காளர்கள் இருப்பதால், அவர்களின் அதிருப்தியைக் களைந்து, அடுத்தப் பொதுத் தேர்தலிலும் அவர்களின் வற்றாத ஆதரவைப் பெற வேண்டியது அவசியமென்றார் அவர்.
உதவித் தலைவரானப் பிறகு இன்று கோலாலம்பூரில் உள்ள DAP தலைமையகத்தில் முதன் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த போது, நெகிரி செம்பிலான ஆட்சிக் குழு உறுப்பினருமான அருள் குமார் அவ்வாறு கூறினார்.
களையப்பட வேண்டிய பிரச்னைகளில் முக்கியமானதாக தமிழ்ப் பள்ளிகளைக் குறிப்பிட்ட அருள் குமார், புதியத் தமிழ்ப் பள்ளிகளைக் கட்ட தனி நிதி ஒதுக்கீடு வேண்டுமென வலியுறுத்தினார்.
அதே சமயம், இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் புதியத் தமிழ்ப் பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.
அரசாங்க வேலை வாய்ப்புகளிலும் இந்தியர்கள் அரவணைக்கப்பட வேண்டும்; நாமும் அவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அருள் குமார் சொன்னார்.
இவ்வேளையில், கட்சியின் தேசிய உதவித் தலைவர் என்ற முக்கியப் பொறுப்பு கிடைத்திருப்பதன் வாயிலாக, சமூகத்துக்கான தனது சேவையை மேலும் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளது.
தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள், குடியுரிமை உள்ளிட்ட சமுதாயப் பிரச்னைகளை கட்சி மேலிடத்துக்கு நேரடியாகக் கொண்டுச் சென்று, அதன் மூலம் விரைந்து தீர்வை ஏற்படுத்த முடியுமென அருள் குமார் கூறினார்.
அண்மையில் கூட கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிடம் சமுதாயப் பிர்ச்னைக் குறித்து பேசினேன்; அவரும் அதனை அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்வதாக உறுதியளித்துள்ளார்.
இது போன்று, சமுதாய மாற்றத்திற்கு வித்திடும் வகையில், இப்புதியப் பொறுப்பை கடமையுணர்வோடு செய்வேன் என்றும் அவர் கூறினார்.