
ஈப்போ, ஏப்ரல்-16, பூச்சோங் புத்ரா ஹைய்ட்ஸ் தீ விபத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடோடி உதவிய சுபாங் ஜெயா அல்-ஃபாலா மசூதி, ஜாலான் புத்ரா ஹார்மோனியில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் இரண்டையும், மலேசியர்கள் ஒரு முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.
பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அந்த இக்கட்டான நேரத்தில் இன – மத பேதம் குறுக்கிடவில்லை.
மனிதம் மட்டுமே வெளிப்பட்டது.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க அவ்விரு வழிபாட்டுத் தலங்களும் கதவைத் திறந்து விட்டன; அது மட்டுமல்லாமல், இந்து ஆலயத்தில் முஸ்லீம் ஒருவர் தொழுகை மேற்கொள்வதையும் நாம் கண்டோம்”
அண்மையக் காலமாக நாட்டில் இன-மத சர்ச்சைகள் அதிகரித்து வரும் நிலையில், அவ்விரு வழிபாட்டுத் தலங்களின் உன்னதப் போக்கு நெகிழ வைக்கிறது.
இது தான் சாதாரண மலேசிய மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வாகும்.
பிரித்தாளும் அரசியல் சித்தாந்தங்களில் இருந்த விடுபட்ட மலேசியர்களின் உணர்வும் செயலும் அப்படித் தான் இருக்கும்; இருக்க வேண்டும்.
சரியான நேரத்தில் மலேசியர்களுக்கு விடுக்கப்படும் சரியான நினைவூட்டல் இதுவாகும் என்றார் அவர்.
15-ஆவது பேராக் சட்டமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றிய போது, சுல்தான் நஸ்ரின் அவ்வாறு கூறினார்.
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய ஆடமாற்ற சர்ச்சை குறித்தும் அவர் கருத்துரைத்தார்.
தாங்கள் சார்ந்துள்ள நம்பிக்கை அல்லது இனத்தின் போராட்டவாதிகளாகக் காட்டிக் கொள்ள ஏதுவாக, இன – மத விஷயங்களை பலர் ஊதிப் பெரிதாக்கி பரபரப்பாக்கி விடுகின்றனர்.
அச்செயல், மக்களிடையே கோபத்தையும் பகைமையையும் தூண்டும் அபாயம் உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாமலில்லை.
‘வெறுப்பு அரசியலை ஏற்றுக்கொள்வது வருத்தமளிக்கிறது; இந்தப் பாதை, மக்கள் இனியும் ஒன்றுபடாமல், பரஸ்பர வெறுப்பு மற்றும் விரோதத்தால் பிரிக்கப்படும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது” என சுல்தான் நஸ்ரின் கவலையை வெளிப்படுத்தினார்.