
கோலாலம்பூர், ஏப்ரல்-22, மலேசியப் பன்முகத் தன்மைக்கும் இன நல்லிணக்கத்திற்கும் இது எதிரானது என, மஹிமா (MAHIMA) எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என்.சிவகுமார் கூறியுள்ளார்.
ஆகக் கடைசியாக, தைப்பிங் மருத்துவமனை நிர்வாகம் இந்த ‘kuil haram’ சொல்லை தனது கடிதமொன்றில் பயன்படுத்தியுள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் ஆலயம் இருப்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதில் எங்களுக்குப் பிரச்னையில்லை.
ஆனால், ‘kuil haram’ எனக் குறிப்பிடும் அளவுக்கா அவர்களுக்கு உணர்ச்சிப் பூர்வமான விஷயங்களைக் கையாளத் தெரியவில்லை?
இந்துக்களை அது எந்தளவுக்குக் காயப்படுத்தும் என, அங்கிருக்கும் ஒருவருக்குக் கூடவா தெரியவில்லை என சிவகுமார் கேள்வி எழுப்பினார்.
இந்துக்களை அவமதிக்கும் ‘kuil haram’ என்ற சொல்லுக்குப் பதிலாக, ‘அனுதியில்லாமல் கட்டப்பட்டது’ ‘பதிவுப் பெறாத’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம்.
பார்க்கப் போனால், தொடர்புத் துறை அமைச்சு, சுகாதார அமைச்சு இந்நேரம் தைப்பிங் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எச்சரிக்கையும் நினைவூட்டலும் விடுத்திருக்க வேண்டுமென, சிவகுமார் சுட்டிக் காட்டினார்.
எனவே, இவ்விவகாரத்தை அமைச்சரவை அளவில் விவாதித்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டுமென, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலருமான அவர் கூறினார்.
இதுவரை, ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மட்டுமே இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதர இந்திய மக்கள் பிரதிநிதிகள் இப்பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும் என சிவக்குமார் கேட்டுக் கொண்டார்