Latestமலேசியா

இந்தியச் சமூகத்துடனான ஜோகூர் அரச குடும்பத்தின் நெருக்கம்; பழையப் பதிவைப் பகிர்ந்து பேரரசியார் நெகிழ்ச்சி

கோலாலம்பூர், ஏப்ரல்-26- மலேசிய இந்தியர்களும் இந்துக்களும் அண்மையக் காலமாக குறிப்பிட்ட சில தரப்புகளால் நாலாப்பக்கமும் சீண்டப்பட்டு வருவது ஊரறிந்த விஷயமே.

அந்த இனவாத – மதவாத சீண்டல்களால் இந்தியர்கள் பெரிதும் மனம் புண்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியச் சமூகத்துடனான தனது குடும்பத்தின் நெருக்கம் குறித்து நாட்டின் பேரரசியார் ராஜா ச’ரித் சோஃபியா 2018-ல் பதிவிட்ட ஒரு சமூக ஊடகப் பதிவை அவர் மீண்டும் பகிர்ந்திருப்பது, ‘அக்காயங்களுக்கு’ அருமருந்தாக பார்க்கப்படுகிறது.

அப்பதிவின் முன்னுரையாக, மற்ற நாடுகளைப் போல் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்படாத மலேசியர்கள் இந்த அமைதியான சுபிட்சமான வாழ்க்கையை அனுபவிக்க இறைவனுக்கு நன்றிக் கூற வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

போர் குண்டுகளிலிருந்து உயிர் போராட்டம் நடத்துவதிலிருந்து நாம் தப்பித்ததாலோ என்னவோ, இங்கு இனவாதத் தீயை மூட்டி விட்டு சிலர் குளிர் காய்வதாக பேரரசியார் இடித்துரைத்தார்.

பல்லின மலேசிய மக்கள் ஒருவரை ஒருவர் மதித்து, அனுசரித்து, ஒற்றுமையாக வாழ வேண்டுமெனவும் அவர் பிராத்தித்தார்.

ராஜா சரித் பகிர்ந்த அந்த 2018-ஆம் ஆண்டு facebook பதிவு, பல ஆண்டுகளாக ஜோகூர் அரச குடும்பத்தை நன்கு கவனித்து பராமரித்து வந்த 4 இந்தியர்களின் சேவைகளை நினைவுக் கூறுகிறது.

அவர்களில் இருவர் அரச குடும்ப மருத்துவர்களான சுப்ரமண்யம் பாலன் மற்றும் சிங்காரவேலு ஆவர்.

தனது கணவரும் மாமன்னருமான சுல்தான் இப்ராஹிம் மற்றும் அரச வாரிசுகளுக்கு உடல் சுகவீனம் ஏற்படும் போதெல்லாம், இரவு பகல் பார்க்காமல் ஓடோடி வந்து அவர்கள் சிகிச்சைப் பார்த்தவர்கள்.

மறைந்த தனது புதல்வர் துங்கு ஜாலில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது, அவருக்கும் இந்த இருவருமே சிகிச்சையளித்ததை ராஜா சரித் நினைவுகூர்ந்தார்.

இவ்வேளையில், பட்டத்து இளவரசரான TMJ ஒரு வயதாக இருக்கும் போதிலிருந்தே ‘கேடயமாக’ இருந்து அவரைப் பாதுகாத்து வந்தவர் தான் மோகன் என்பவராவார்.

சுல்தான் இப்ராஹிம் வெளியில் சென்றால், பாதிகாப்புக் கருதி அரண்மனையிலேயே அவர் தங்கச் சொல்லும் அளவுக்கு நம்பிக்கைக்குரியவர் மோகன்.

நான்காமவர், சுல்தான் இப்ராஹிமுடன் உஞன் செல்லும் பாதுகாப்பு அதிகாரியான சுகுமாறன்.

ஒரு முறை சுல்தான் கடிந்துகொண்ட போதிலும், அவர் மீது பாசமும் விசுவாசமும் குறையாமல் சேவையாற்றியவர் சுகுமாறன் ஆவார்.

“ஜோகூர் அரச குடும்பம் பல்லின மக்களுடன் அணுக்கமாகப் பழகி வருகிறது; எனினும் இப்போது இந்தியர்கள் ‘நெருக்கடிக்கு’ ஆளாகியிருப்பதால் இந்த 4 இந்தியர்களின் அன்பையும் விசுவாசத்தையும் பகிருகிறேன்” என 2018 பதிவை ராஜா சரித் சோஃபியா முடித்திருந்தார்.

சீ ஃபீல்ட் ஆலய கலவரத்தில் தீயணைப்பு வீரர் மொஹமட் அடிப் மொஹமட் காசிம் உயிரிழந்து, நாட்டில் பெரும் பதற்றம் நிலவிய சமயத்தில் அவர் இப்பதிவை எழுதியிருந்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!