
அலோர் ஸ்டார், மே-6, ஏப்ரல் 9-ஆம் தேதி புத்ராஜெயா MACC அலுவலகம் செல்லும் வழியில் டத்தின் ஸ்ரீ பேமலா லிங் யுவே கடத்தப்பட்டதில் ஈடுபட்ட கார்கள், போலிப் பதிவு எண் பட்டையைப் பயன்படுத்தியுள்ளன.
சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வுடன் சரிபார்த்ததில் அது அம்பலமானதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஷுஹாய்லி மொஹமட் சேய்ன் கூறினார்.
அவ்வாகனங்களின் மாடல்களையும் இரகங்களையும் அடையாளம் கண்டுள்ளோம்; இந்நிலையில், அவற்றுடன் ஒத்துப் போகிறதா என்பதைக் கண்டறிய, புத்ராஜெயா, கோலாலம்பூர், மற்றும் சிலாங்கூர் எல்லைகளில் இருந்து எடுக்கப்பட்ட CCTV கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகிறோம் என்றார் அவர்.
அவ்வாகனங்கள் குறித்து அவர் மேற்கொண்டு கருத்துரைக்க மறுத்து விட்டார்.
இவ்விவகாரம் கோலாலாம்பூர் போலீஸின் விசாரணையில் இருப்பதால், வியாழக்கிழமை KL போலீஸ் தலைவரின் செய்தியாளர் சந்திப்பு வரைக் காத்திருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
சம்பவத்தன்று பிற்பகல் 3 மணிக்கு 3 கார்களால் வழிமறிக்கப்பட்டு டத்தின் ஸ்ரீ பேமலா கடத்தப்பட்டார்.
பணச்சலவை புகார் தொடர்பில் புத்ராஜெயா MACC அலுவலகத்திற்கு அவர் e-hailing காரில் போய்க் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடத்தல்காரர்கள் போலீஸார் அணியும் ‘வெஸ்ட்’ அணிந்திருந்ததாக, e-hailing காரோட்டிச் சென்ற நபர் போலீசிடம் தெரிவித்திருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது