
கோலாலாம்பூர், ஜூலை-4 – புத்தகப் பற்றுச்சீட்டு திட்டத்தை ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்துமாறு, கல்வி அமைச்சுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் கல்வி மேம்பாட்டு மற்றும் நலனபிவிருத்திச் சங்கம் அக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.
முன்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இச்சலுகை இவ்வாண்டு முதல் ஆசிரியர்களுக்கும் வழங்க கல்வி அமைச்சு எடுத்துள்ள முடிவு பாராட்டுக்குரியது.
அதே சமயம், ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களும் நாட்டின் கல்வி மேம்பாட்டுக்கு உழைத்திருப்பதால், அவர்களுக்கும் இந்த பற்றுச்சீட்டுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டால் சிறப்பு.
ஓய்வுப் பெற்றாலும், தன்னார்வ அடிப்படையில் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்;
இச்சலுகையை வழங்குவது அவர்களின் சேவைக்கான அங்கீகாரமாக இருப்பதோடு, வாழ்நாள் முழுமைக்குமான கற்றலை ஊக்குவிக்கும்.
எனவே சேவை அந்தஸ்து கருதாமல், பணி ஓய்வுப் பெற்ற ஆசிரியர்களுக்கும் இந்த புத்தகப் பற்றுச் சீட்டு திட்டத்தை விரிவுப்படுத்துவது குறித்து அமைச்சு பரிசீலிக்க வேண்டுமென, அச்சங்கத்தின் தலைவர் எம். வெற்றிவேலன் அறிக்கையொன்றில் கூறினார்.