
ஜித்ரா, ஜூலை-6,
கெடா, ஜித்ராவில் நேற்று இரு குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில், மூன்றாவது சந்தேக நபரும் சுட்டுக் கொல்லப்பட்டான்.
34 வயது அந்நபர் நேற்றிரவு 7.50 மணியளவில் பண்டார் புத்ரி ஜெயாவில் சுட்டுக் கொல்லப்பட்டதை, புக்கிட் அமான் போலீஸ் உறுதிப்படுத்தியது.
கைதுச் செய்ய முயன்ற போது அவன் மறுத்தான்; அதன் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவன் சம்பவ இடத்திலேயே மரணமுற்றான்.
அவன், பல்வேறு மாநிலங்களில் ஆயுதமேந்திக் கொள்ளையிட்டு வந்த கும்பலைச் சேர்ந்தவன் என நம்பப்படுகிறது.
2022 முதல் சுமார் 6 மில்லியன் ரிங்கிட் இழப்பை உட்படுத்திய ஆயுதமேந்தியக் கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுக்கு அக்கும்பலே பொறுப்பாகும்.
34 வயது அவ்வாடவன் அந்தக் கொள்ளை கும்பலின் முக்கிய உறுப்பினர் என்றும், குறைந்தது 12 பேராவது அதில் ‘அங்கத்தினர்களாக’ இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவன் மட்டுமே அண்மையில் மலாக்கா, நெகிரி செம்பிலான், பேராக் ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்த ஆயுதமேந்தியக் கொள்ளையில் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
நேற்று காலை ஜித்ரா, பண்டார் டாருல் அமான் அருகே PLUS நெடுஞ்சாலையில் 2 சந்தேக நபர்கள் போலீஸுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.